அரையர் தேசம்

 

குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி

தினசரி டிராபிக் சிக்னலில் திரும்பி வண்டி இடது புறத் தெருவில் நுழையும்போது இது தட்டுப்படத் தவறுவதே இல்லை. ஏழெட்டு பேர். வற்புறுத்தி எழுப்பி டிரஸ் செய்துவிட்டு நர்சரி பள்ளிக்கு இழுத்துப் போகப்படும் பெரிய சைஸ் குழந்தைகள் போல் அரை நிஜார். காலில் கான்வாஸ் ஷூ. வஞ்சனையில்லாத தொப்பையை மறைக்கும் டீ ஷர்ட், அறுபது சொச்சம் வயசுப் பெரிசுகள் எல்லோரும். இதில் ரெண்டு பேர் தரையில் விழுந்து விழுந்து கும்பிட்டு எழுந்து கொண்டிருப்பார்கள். இன்னும் மூணு பேர் ரெண்டு காதையும் கையால் பிடித்துக் கொண்டு சிரத்தையாகத் தோப்புக்கரணம் போடுவார்கள். முன்னால் காம்பவுண்ட் சுவரில் ‘இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்’ என்று பெரிய எழுத்தில் எழுதி வைத்திருக்கும். சுத்தம் சோறு போடட்டும். அதுக்காக சிறுநீர் கழிக்காதே அறிவிப்புக்கு எல்லாம் கும்பிட்டு விழணுமா என்ன? வண்டியை நிறுத்தி விட்டு ஒருநாள் பக்கத்தில் போய் விசாரித்தபோது புரிந்தது – அவர்கள் பக்கத்தில் ஒரு காலனியில் வீடு கட்டி, ஒரே காலகட்டத்தில் வேலைக்குப் போய், சேர்ந்தாற்போல் ரிடையர் ஆகி, ஒரே மாதிரி மூட்டுப் பிடிப்பு, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு வந்து , ஒரே டாக்டரிடம் போய், ஒரே மாதிரி மருந்து, மாத்திரை, ‘காலையில் வாக்கிங், லேசான உடற்பயிற்சி’ பிரிஸ்கிரிப்ஷன் பெற்றவர்கள். வாக்கிங் முடித்து இங்கே எக்சர்சைஸ் நடக்கிறது.

நாடு நகரமெல்லாம் ஷார்ட்ஸ் பரவலாக உபயோகத்துக்கு வந்த பிற்பாடு இப்படியான டிரவுசர் பாண்டிகளின் இம்சை தாங்க முடியலை. ஞாயிற்றுக்கிழமை காலையில் கட்டம் போட்ட கைத்தறி லுங்கியைத் தழையத் தழையக் கட்டிக் கொண்டு வெங்கட்நாராயணா தெருவில் நடக்கிற ஒரே ஆண் நான் தான். திருப்பதி கோவில் வாசலில் லட்டு வாங்க க்யூவில் நிற்கிற மகாஜனங்கள் கூட நிஜார் அணிந்துதான் பக்தி சிரத்தையோடு காத்திருக்கிறார்கள். சாமி மட்டும் வேட்டியில்.

பூங்காவில் நுழைந்தால், புல்தரையை நாசம் செய்தபடி டிரவுசர்களின் ரவுசு தொடர்கிறது. ஒன்றிலிருந்து ஒன்பது வரையான எல்லா எண் மாதிரியும் யோகாசன போஸில் உடம்பை நெளிந்து அங்கங்கே காட்சி அருள்கிறார்கள். எட்டு போட்டு அதற்குக் கொம்பும் முளைத்த மாதிரி உடலை வில்லாக வளைத்து தலைக்கு மேல் காலை வைத்தபடி ஒருத்தர் பல் இல்லாமல் சிரிக்கிறார். பார்த்துச் செய்யுங்க சார், எசகு பிசகாக எங்கேயாவது முடிச்சு விழுந்துடப் போறது.

பூங்காவை ஒரு சுற்று சுற்றி வருகிறேன். ஒரு கூட்டம் வெள்ளை அரை டிராயர்கள் என்னைப் பார்த்தபடி உரக்கச் சிரிக்கிறார்கள். இடுப்பில் லுங்கி இருக்கா என்று அவசரமாகத் தடவிப் பார்த்துக் கொள்கிறேன். என் முதுகுக்குப் பின்னால் சிரிப்பு ஓயவே இல்லை. இன்னொரு சுற்று முடித்து நிஜார் கும்பலை நெருங்கும்போது இன்னொரு தடவை அடக்க மாட்டாமல் எல்லோரும் சிரிக்கிறார்கள் சிரிப்பு என்னனப் பார்த்து இல்லை. நடுவில் நின்று ஒருத்தர் ஒன், டு, த்ரீ சொல்லி முடித்ததும் சிரித்து, கையைக் காட்டியதும் சுவிட்ச் அணைத்த மாதிரி நிற்கிறது.

சிரிப்பு மருத்துவமாம். வாய் விட்டுச் சிரித்து நோய் விட்டுப் போக வைக்கிற கூட்டத்தில் டாக்டர் யாரும் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அதெப்படி ஜோக் அடிக்காமலேயே பல தினுசாக உரக்கச் சிரிக்க முடிகிறது அவர்களுக்கு? என்ன நோயெல்லாம் இப்படி சிரிப்பாகச் சிரித்து கரைந்து போனது? கொம்பு முளைத்த எட்டு வகையறாவுக்கு இப்படியான அவுட்டுச் சிரிப்பு இடைஞ்சலாக இல்லையா?

என் நடைக்கு சரியாக பக்கத்து புல்தரை டிராக்கில் ஓடிவந்து ஒரு காக்கி அரையர் நோட்டீசை நீட்டுகிறார். ‘பூங்கா ஜோக்கர்ஸ் அசோஷியேஷன்’ என்று உரக்கப் படிக்கிறேன். ‘ஜோக்கர் இல்லே சார், ஜாகர்ஸ். நடக்கிறவங்க’ அவர் பெருந்தன்மையோடு திருத்துகிறார். நடக்கிறவர்கள் சங்கத்துக்கு அப்ளிகேஷன் ஃபாரம். வருடம் ஐநூறு ரூபாய் சந்தா. பொதுக் குழு, செயற்குழு எல்லாம் உண்டாம். பூங்காவிலேயே பொங்கல், வடை, காப்பி சாப்பிட்டு தேர்தல் வைத்து நாலு வருடமாக வெற்றிகரமாக நடக்கிறதாம். சிரிக்கிறதாம். எட்டு போடுகிறதாம்.

‘சங்கத்தில் சேர்ந்தா வேறே என்ன எல்லாம் கிடைக்கும்?’ அவர் வாயைப் பிடுங்குகிறேன். அவர் தன் காக்கி டிரவுசரைக் காட்டுகிறார். அது எதுக்கு எனக்கு? ‘ஐம்பது பெர்சண்ட் தள்ளுபடியில் மிலிட்டரி ஸ்டோரில் இருந்து ஸ்பெஷலாக வரவழைச்ச ஹாஃப் பேண்ட் வாங்கிக்கலாம்’. நான் அவரைக் கூர்ந்து பார்க்கிறேன். முழு டிராயரே மூட்டுக்கு மேலே இப்படி நின்றால், ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி செய்து வாங்கினது அண்டர்வேர் மாதிரி போய்விடாதா? தேர்தலில் நின்று ஜெயித்து அந்த அரை டியாயர் சாம்ராஜ்யத்தில் பதவி வகிக்கலாம் என்று அடுத்து ஆசை காட்டுகிறார். ஊஹூம், நான் வேட்டி கட்சி.

நேற்று ஆபீஸ் போகிறபோது சிக்னல் திரும்பியதும் பார்த்தேன். சுவரில் சுண்ணாம்பு அடித்து ‘எய்ட்ஸை தடுக்க ஆணுறை அணியுங்கள்’ என்று புது விளம்பரம். அதுக்கு முன்னால் பழைய விட்டலாச்சார்யா படத்தில் ஜெயமாலினி போல் வயிற்றை வளைத்து வளைத்து அரை டிரவுசர்கள் ஆடிக் கொண்டிருந்தன.

(கடந்த வாரம் குங்குமத்தில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன